இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சுஜய்’ கப்பல், நேற்று (23) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சமர்த் வகை கடலோரக் கண்காணிப்பு கப்பலான சுஜய், செயல்பாட்டு ஓய்வு மற்றும் இந்திய – இலங்கை தேசிய மாணவர் படையினரின் கூட்டு சர்வதேச சைக்கிள் பயணத்தில் பங்கேற்பாளர்களை ஏற்றிச் செல்லும் நோக்கில் நாளை (25) வரை திருகோணமலையில் தங்கியிருக்கும்.
கப்பலின் கட்டளை அதிகாரி DIG விவேக் டோக்ரா, கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பி.வி. பெர்னாண்டஸ் மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் கொமாண்டர் ஐ.பி. விஜேசிங்க ஆகியோரை சந்தித்தார். பின்னர், இலங்கை கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன கப்பலுக்கு விஜயம் செய்து, அதன் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்திய கப்பல் பணியாளர்கள் இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினருடன் தொழில்சார் மற்றும் விளையாட்டு தொடர்பான பரிமாற்றங்களிலும் ஈடுபட்டனர். அத்துடன், கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் உபகரணங்களை நடைமுறையில் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிகளையும் இலங்கை கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளனர்.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களின் இலங்கை விஜயங்கள், இரு நாடுகளின் கடல்சார் படைகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்துவதுடன், இந்தியாவின் ‘Neighbourhood First’ மற்றும் ‘MAHASAGAR’ கொள்கைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

