முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், பாரம்பரிய கலைகளைப் போற்றி வளர்த்து வரும் காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்திற்கு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கீழைத்தேய இசைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு நேற்று(23) திங்கட்கிழமை காரைதீவில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்தில், பணிமன்றத்தின் உப தலைவர் எஸ். சிவராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி. அருணன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி. இராஜகுலேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், பணிமன்றத்தின் சார்பில் போசகர் இரா. குணசிங்கம், செயலாளர் கே. ஜெயராஜீ, பொருளாளர் எம். வரதராஜன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களான கே. தட்சணாமூர்த்தி, டி. நடேசலிங்கம் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது ஒரு தொகை இசைக்கருவிகள் நாடாளுமன்ற உறுப்பினரால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இவ்வன்பளிப்பானது பாரம்பரிய இசைக்கலைகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

