மழைக்கால இரவுகள் குறும்படம் வெளியீடு!

மண்ணின் மணத்தையும் வாழ்வியலையும் சுமந்து வந்த மழைக்கால இரவுகள் குறுந்திரைப்படம், சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்ற நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் YouTube தளத்தில் வெளியிடப்பட்டது.

OSAI Films நிறுவனத்தின் தயாரிப்பில், சுகந்தினி ரமணதாஸ் வழங்கிய 20 நிமிடங்கள் கொண்ட மழைக்கால இரவுகள் குறுந்திரைப்படம் கடந்த 25ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் ஓரங்கம் (Orangam) YouTube தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

சர்வதேச திரைப்பட விழாக்களின் பல்வேறு மேடைகளில் விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருந்த இக்குறுந்திரைப்படம், எமது மண்ணின் பண்பாடு, வாழ்வியல் மற்றும் உணர்வுகளைத் தாங்கிய படைப்பாக அமைந்திருந்தது. வெளியீட்டைத் தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருந்தது.

ஓரங்கம் மற்றும் ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், கலைவளரி இராமணதாஸ் மற்றும் சுகந்தினி ரமணதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை சுகிர்தன். சீ இயக்கியிருந்தார். ஜெயந்தன் விக்கி இசையமைத்திருந்ததுடன், அலெக்ஸ் கோபி ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

இணை இயக்குநர்களாக கலை, கலா மோகன், தெய்விந்திரன் ரிஷிந்தன் மற்றும் அபிசன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். ஒப்பனைப் பொறுப்பை வாணி ஏற்றிருந்ததுடன், விளம்பர வடிவமைப்புப் பணிகளை மது ஸ்டாலின் மற்றும் துசிகரன் மேற்கொண்டிருந்தனர். தயாரிப்பு நிர்வாகப் பணிகளில் டர்வின் மற்றும் மிருணன் ஆகியோர் இணைந்திருந்தனர். பூவரசி மீடியாவும் இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் பங்களித்திருந்தது.

ஜொனி அன்ரன், யாழரசி கிறிஸ்துராஜா, அம்பிகை ஜிவேஸ்வரன், யசிந்தா, மணி, சுகி அஜன் மாஸ், நித்திஸ் மற்றும் சுவைக்கின் கிறிஸ்துராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர்.

எமது மண்ணின் கலைஞர்களின் படைப்பாற்றலையும் சினிமாத் திறனையும் சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த மழைக்கால இரவுகள் குறுந்திரைப்படம், வெளியீட்டின் பின்னர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *