மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டுக் கடை ஒன்றில்; வாங்கிய மதிய உணவான சோற்றுப் பார்சலில் புழு உள்ளதைக் கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று(24) முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக பொதுச் சுகாதரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
குறித்த கடையில் வழமையாக மதிய உணவான சோற்றுப் பார்சலை சட்டத்தரணி ஒருவர் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் சம்பவதினமான நேற்று பகல் 2.00 மணியளவில் மதிய உணவான சோற்றுப் பார்சலை வாங்கிக் கொண்டு தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு ஓடுவதைக் கண்டு கொண்டார்.
இதனையடுத்து கறுத்த புழு சாப்பாட்டு பார்சலுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்குச் சென்று குறித்த கடைக்கு எதிராக முறைப்பாடு செய்தார். இதனையடுத்து உடனடியாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குறித்த கடையை முற்றுகையிட்டு சோதனை செய்ததையடுத்து அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவுப் பொருட்களை குளிரூட்டியில் இருந்து மீட்டனர்.
இவ்வாறு மீட்டகப்பட்ட மனித பாவனைக்கு உதவாத பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்க வைத்திருந்தமை மற்றும் மதிய உணவான சோற்றுப் பார்சலில் புழு இருந்தமை தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தனித்தனியாக கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த காலங்களில் குறித்த உணவு விற்பனை செய்துவரும் கடையில் இருந்து மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தயாரித்தமை, உணவு தயாரிப்பதற்காக பொருட்களை வைத்திருந்தமை மற்றும் சுகாதார சீர்கேடாக உணவுகளை கையாண்டமை போன்ற பல குற்றச்சாட்டின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அதன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவரை தண்டப் பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தமையும் குறிப்பிடத்தக்கது.


