ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் கிறிசலிஸ் அமைப்பு ஆகியன பதுளையில் சுமார் 100 பெண் தலைமையிலான நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை நிறுவனங்களுக்கு பொருட்கள் மூலமான ஆதரவை வழங்கியுள்ளன.
கொரியக் குடியரசின் நிதியுதவியுடன் கூடிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த செயற்திட்டமானது பெண்களின் பொருளாதார வலுவூட்டல் மற்றும் தலைமைத்துவம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் அவர்களின் முனைப்பான பங்களிப்பு முக்கிய முன்னுரிமைகளாக உள்ள இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு துணைபுரிகின்றது.
தொழில்முயற்சியாண்மை பயிற்சி அடிப்படையின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது தொழில்முனைவோருக்கு அவர்களின் வணிகங்களை மேம்படுத்தவும், நிலைபேறான வருமானத்தை ஈட்டவும் சமுதாயங்களுக்குள் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கவும் தேவையான சாதனங்களையும் வளங்களையும் வழங்கியதன் மூலமாக ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்தது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கொரியக் குடியரசுத் தூதரகத்தின் துணைத் தலைவரான யுன்ஜி காங் கூறுகையில், “இந்த முயற்சி கடந்த சில ஆண்டுகளில் பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கிறது. பெண்கள் தங்கள் வணிகங்களை கட்டியெழுப்பவும் வளர்க்கவும் தேவையான வழிவகைகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம், நாங்கள் அவர்களின் பொருளாதார திறனில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் சமூகங்களுக்குள் தலைவர்கள் மற்றும் சமாதானத்தின் பிரதான முகவர்களாக அவர்களின் வகிபங்கை மேலும் பலப்படுத்துகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.


