சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள் : முரளிதரன் தெரிவிப்பு

ஊழலை ஒழிக்கவந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதாக மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும்,பருத்தித்துறை பிரதேச சபைக்கான சுயேட்சை வேட்பாளருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த (03.04.2025) அன்று வடமராட்சி கிழக்கில் இருந்து தேசிய மக்கள் சக்தியினர் தமக்கு ஆதரவானவர்களை அழைத்து சென்று யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்களத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததாக மக்கள் சிலர் என்னிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

இதனுடைய உண்மைதன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

சில நபர்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒரு சிலர் சட்டவிரோதமாக தொழில் புரிவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாரத பிரதமர் இலங்கை வந்த போது கடற்பரப்புக்களில் அதிகளவான இந்திய இழுவை மடி படகுகள் அட்டகாசம் செய்துள்ளனர் அனைத்தையும் ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று என்ன செய்கின்றது?

எமது கடல் வளம் அழிந்து கொண்டு செல்கின்ற இந்த சூழலில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பது பிழையான விடயம்.

மக்களின் முறைப்பாட்டை எழுத்துமூலம் கோரியுள்ளேன் இதை மீனவ அமைப்புகளுக்கு வெளிப்படுத்தவுள்ளேன் வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம் என்பதனை மக்கள் இனியாவது புரிந்து கொண்டு வருங்காலத்தில் செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *