பிரம்மகுமாரிகள் ஆன்மீகக் கலைக்கூடத்தின் ஓராண்டு பூர்த்தி விழா

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் அமையப் பெற்றுள்ள பிரம்மகுமாரிகள் இராஜ யோக ஆன்மீகக் கலைக்கூடத்தின் ஓராண்டு பூர்த்தி விழா எதிர்வரும் 11.04.2025 திகதி வெள்ளிக்கிழமை மிகப் பிரமாண்டமான முறையில் கொக்கட்டிச்சோலையில் இடம்பெறவுள்ளது.
பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையமானது பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம், அபு, இராஜஸ்தான் எனும் இடத்தினை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

இலங்கையில் அமையப்பெற்றுள்ள பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையங்கள் இலங்கை சனநாயக சோசலீச குடியரசின் 37/1988 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ளதுடன், இதனது அனைத்து செயற்பாடுகளும்  இலங்கை முழுவதும் இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

அந்த வகையில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெவ்வேறு பிரதேசங்களிலும் தமது கிளை நிலையங்களை ஸ்தாபித்து இலவச சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை என அழைக்கப்படும் பெரு நிலப்பரப்பின் பட்டிப்பளை – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள சோதிலிங்க கலைக்கூடமானது தனது ஒரு வருட சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

குறித்து  சோதிலிங்க கலைக்கூடத்தின் ஒருவருட நிறைவு விழாவினை முன்னிட்டு ஆன்மீக கலைக்கூடத்தினை அண்மித்து காணப்படும் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த பெண் தலைமைத்துவம் வகிக்கும் கணவனை இழந்த ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை (10 கிலோ அரிசி) வழங்குவதற்கான ஏற்பாடுகள்  பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11.04.2025 திகதி காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தின் பொறுப்பாளர் கே.சுரேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள கொக்கட்டிச்சோலை ஆன்மீகக் கலைக்கூடத்தின் ஓராண்டு பூர்த்தி விழாவிற்கு பிரதம விருந்தினராக சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் வருகைதந்து  நிகழ்வை சிறப்பிக்கவுள்ளதுடன், மேலும் பல நாடுகளில் இருந்தும் இலங்கையின் பல பாகத்திலும் இருந்தும் ஆன்மீக தலைவர்களும், பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *