மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு தெரிவித்தது. ஆட்சிக்கு வந்தால் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம் என வாக்குறுதி வழங்கிவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடாத்தாமல் என்.பி.பி இழுத்தடிப்பு செய்கிறது.
பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள சித்திரவதைக் கூடங்கள், சட்ட ரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நமது நாடு சுதந்திரம் அடைந்த பின் ஒரு சமூகத்தை அடக்கி ஆள்வதற்கான செயல்பாடுகளும் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை அழிப்பதற்கான செயல்பாடுகளும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
எமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற கொடூர யுத்தத்தினால் சகல இன மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆயிரக்கணக்கான சகல இனத்தையும் சேர்ந்த மக்களும் கொல்லப்பட்டனர். நமது நாட்டில் சிறந்த தேசிய தலைவர்களாக செயல்படுவதற்கு பொருத்தமான தலைமைகள் கொன்று குவிக்கப்பட்டனர் இதனால் நீண்ட கால அனுபவங்களை பெற்று சகல சமூகங்களிலும் இருந்து வந்த ஜனநாயக தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பல தசாப்த காலங்களுக்குப் பின் தலைவர்களாக வர வேண்டிய இளைய தலைவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் நாட்டின் தலைவர்களாகவும் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பது யதார்த்தமாகும்.
1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு நமது நாட்டில் மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. அன்று மாகாண சபை முறைமைக்கு எதிராக ஜே.வி.பி கட்சியினர் நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அது ஒரு வன்முறையாக மாறியது.
நமது நாட்டைப் பொறுத்த வரையில் மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டதனால் 09 மாகாணங்களிலும் நமது மக்களுக்கு பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இனப்பிரச்சினை தீர்வின் அடையாளமாகவே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் மாகாண முதலமைச்சர்களாக சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைச்சரவையில் முஸ்லிம், தமிழ், சிங்கள அமைச்சர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு, நீர்வழங்கல், கிராமிய மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராக 2 தடவைகள் பதவி வகித்ததுடன் 06 தடவைகள் கிழக்கு மாகாண சபையின் பதில் முதலமைச்சராகவும் கடமை புரிந்து கிழக்கு மாகாணத்தின் மூவின மக்களுக்கும் பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
30 வருட காலங்களாக நமது நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளினால் கிழக்கு மாகாணத்தில் சமூகங்களுக்கிடையில் பாரிய இன முறுகல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கிழக்கு மாகாணத்தில் அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசம் எனவும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனவும் 2 நிருவாகங்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மூவின சமூகங்களுக்குமிடையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இன ஒற்றுமையை கட்டியெழுப்பினோம்.
கிழக்கு மாகாணத்தில் கந்தளாய் தொடக்கம் பாணம வரையில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தித் திட்டங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டன.
என்.பி.பி அரசாங்கம் வெற்றி பெற்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தீர்கள். ஆட்சிக்கு வந்த பின் இந்த வருட இறுதியில் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என வாக்குறுதி வழங்கினீர்கள். மக்களும் மாகாண சபை தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெறும் என பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். திடீரென ஆளுங்கட்சியினர் இந்த வருடம் மாகாண சபை தேர்தல் நடைபெறாது எனவும் அடுத்த வருடமே நடைபெறும் எனவும் அறிவித்துள்ளீர்கள்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் தலைவர்களை சந்தித்த வேளையில் இலங்கையில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்குரிய திருத்த சட்டதிட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மாகாண சபை தேர்தலை நடாத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தன்னிடம் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான திருத்ததச்சட்டதை சமர்ப்பிப்பது தொடர்பான எந்த வித நடவடிக்கைகளையும் இதுவரை ஆளுங்கட்சியினர் மேற்கொள்ளாமலிருக்கின்றனர். அன்று 1987ம் ஆண்டு மாகாண சபை முறைமைக்கு எதிராக செயற்பட்ட நீங்கள், இன்று அரசாங்கத்தின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு மாகாண சபை தேர்தலை நடாத்தாமல் இழுத்தடிப்பு செய்கின்றீர்கள். இதே வேளை ஜே.வி.பி கட்சியினுடைய செயலாளர் திரு. ரில்வின் சில்வா அவர்கள் இலங்கையில் மாகாண சபைகள் முறைமையை முற்றாக ஒழிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடாத்தும் விடயத்தில் என்.பி.பி கட்சிக்கும் ஜே.வி.பி கட்சிக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிகிறது. எனவே மாகாண சபை தேர்தலை உடனடியாக நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை ஆளும் கட்சியினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

