சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு : புத்தளம் மக்களுக்கு உதவி

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் நிகழ்வில் இன்றைய தினம் முருக பக்திபாடல்களை திருவாவடுதுறை ஆதீன திருமுறைச் செல்வர் ந.பரமேஸ்வரன் வழங்கினார்.

ஆர்மோனிய இசையை இசைக் கலாமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும், மிருதங்க இசையை மிருதங்க வித்துவான் ம.லோகேந்திரன் அவர்களும், கஞ்சிரா இசைக் கருவியை கலாவித்தகர் ப.விக்னேஸ்தரன், ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்த 06/04/2025 அன்று புத்தளம் சேனைக்குடியிருப்பு, மணல்குன்று, அபயபுர, அரலியபுயன, பிரதேசங்களில் வாழும் பல்லின சமூகங்களை சார்ந்த,தெரிவு செய்யப்பட்ட 55 குடும்பங்களுக்கு ரூபா 200,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் சித்திரைப் பொங்கலை முன்னிட்டு வழங்கப்பட்டன.

குறித்த உதவி வழங்கும் நிகழ்வு சமூகசேவையாளரும், புத்தளம் கருமாரிஅம்மன் ஆலய ஸ்தாபகருமான எஸ். மகேந்திரன் தலைமையில் ஆலயத்தில் இடம் பெற்றது. இதில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்கள் சகிதம் நேரடியாக சென்று உதவிகளை வழங்கிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *