யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரிழந்த வித்தியா கொலை வழக்கினுடைய மரண தண்டனை கைதியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட போது அங்கு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிறைச்சாலை அதிகாரிகளின் உத்தரவுப்படி அங்கிருந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டனர்.
வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பூபாலசிங்கம் ஜெயக்குமார் இன்று சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனால் இன்று காலை முதலே யாழ்ப்பாணம் சிறைச்சாலை முன்பாக அதிகளவான ஊடகவியலாளர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுப்பதை தடுக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் சிறைச்சாலை உட்பகுதியில் கதவுகளை மூடி சடலத்தின் உடற்கூறு பரிசோதனைக்காக சிறைச்சாலை பேருந்தில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கும் ஊடகவியலாளர்கள் காத்திருக்கவே சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் ஊடாக ஊடகவியலாளர்களை வெளியேற்றுமாறு அறிவுறுத்தினர்.
இதனையடுத்து அங்கு வந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்ததுடன் வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறுமாறும் காணொளி எடுக்க முடியாது எனவும் முரண்பட்டனர்.

