கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச பண்பாட்டு பெருவிழா

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசாரப் பேரவை இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா இன்று(15) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
பளை இரட்டைக்கேணி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத்தொடர்ந்து பண்பாட்டுப் பேரணியாக தமிழ் இனியம், கும்மி, கோலாட்டம் மற்றும் காவடி போன்றவை அலங்கரிக்க பேரணியாக விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அரங்கில்  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலன் தலைமையில் பண்பாட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைத் தவிசாளர் சுரேன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கிளிநொச்சி மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி மற்றும் பளை தொழிலதிபர் காந்தரூபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும், பளை ஒப்பனைக் கலைஞர் கலாபூஷணம் தனபாலசிங்கம் அதிதிக் கலை விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சிவ நடனம், கிராமிய நடனம், நாடகம், இசை இன்பம், சாஸ்திரிய நடன சங்கமம், வாத்திய இசைச் சங்கமம், கலைத்தென்றல் விருது வழங்கல் மற்றும் இளம் கலைஞர் விருது வழங்கல் என்பன இடம்பெற்றன. இளங்கலைஞருக்கான விருதினை நடனத்துறையில் சிறப்பாக செயற்பட்டு வரும் சரணீதரன் சரண்யா பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *