மக்களின் காணிகள் மக்களிடம் மீள வழங்கப்பட வேண்டும்; செந்திவேல் கோரிக்கை

தையிட்டியில் கடந்த இரண்டு வருடங்களாகப் போராடும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களின் கோரிக்கை தான் முக்கியமே தவிர அரசியற்கட்சி இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு பிரச்சினையே அல்ல என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த பொதுவுடைமைவாதியுமான சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்.

 

யாழ்.கொக்குவில் நேற்று முன்தினம்(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

கோரிக்கையை அரசு சரியாக நிறைவேற்றினால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கூறும் அரசியல் கட்சி தானாகவே இந்த விவகாரத்திலிருந்து விலகிக் கொள்ளும்

 

தையிட்டி விவகாரத்தில் அரசியல் கட்சி சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கூறியிருப்பது இந்தப் பிரச்சினையைத் திசைதிருப்பும் ஒரு செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம்.

 

எந்தவொரு இடத்திலும் பிரச்சினை ஏற்பட்டால் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் தலையிடுவது இயல்பு மாத்திரமல்ல தேவையுமாகும்.

 

எங்கள் கட்சியான மாக்சிச லெனினிசக் கட்சி ஒரு தொழிலாளர் நலன் சார்ந்து செயற்படும் கட்சி. தொழிற்சாலையொன்றுக்கு முன்பாகத் தொழிலாளர்கள் போராட்டம் நடாத்தினால் நாங்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

 

நிச்சயமாக அந்த விவகாரத்தில் தலையிட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போம்.

 

நேர்மையாகத் தையிட்டி விகாரைப் பிரச்சினையைத் தற்போதைய அரசாங்கம் கையாளத் தயாராகவில்லை. தெற்கில் பேரினவாத சக்திகளையும், பெளத்த தலைமைப் பீடங்களையும் கோபப்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த விவகாரத்தில் அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.

 

எனினும், மக்களின் காணிகள் மக்களிடம் மீள வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையும், நிலைப்பாடுமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *