எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலினை முன்னிட்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம்(02) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம். சுபியானின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேர்தல்களின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விடயங்கள் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது தெளிவூபடுத்தப்பட்டன.
உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களினால் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விளக்கங்களும் இதன் போது வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு தேர்தல் முறைப்பாடுகளுக்கான பிரதம உதவி தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், கல்லடி 243வது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரதீப்களுபான, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், லலித் லியலாரத்ன, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2352 வேட்பாளர்கள் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


