இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இராஜ கணபதி ஆலயமும் இணைந்து நடாத்திய தெய்வீக கிராம நிகழ்வு 2025 கடந்த வெள்ளிக்கிழமை(12) நடைபெற்றது.
குறித்த நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலன் தலைமையில், இராஜ கணபதி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, சிறப்பு விருந்தினர்களாக சமூக மருத்துவ உத்தியோகத்தர் திபேகா மற்றும் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் பா.நிலோஜினி ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக இயக்கச்சி மகா வித்தியாலய அதிபர் கதிரவேற்பிள்ளை கஜேந்திரன் மற்றும் கோவில் வயல் சி.சி.த.க பாடசாலை அதிபர் சர்மினி குகச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தெய்வீக கிராம ஊர்வலத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நந்திக் கொடியேற்றல், ஆலய வழிபாடு மரநடுகை என்பவற்றைத் தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களின் நடனம், கதா பிரசங்கம் நாடகம் வயலின் இசைக் கச்சேரி, சிந்துநடை கூத்து ஆகிய கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன.
மேலும் அறநெறி பாடசாலைக்கு அர்ப்பணிப்பான சேவையாற்றி வரும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பும் தேசிய ஆக்கத்திறன் விருது 2025இல் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்த மாணவர்கள் கௌரவிப்பும் முதியோர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், முதியோர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


