இலங்கைக்கு கடத்துவதற்காக திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி கொண்டிருந்த 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை திருப்புல்லாணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் படகு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கை மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், பீடி இலை பண்டல்கள், ஐஸ், ஹெராயின், கஞ்சா போதைப்பொருட்கள் மற்றும் ஒயில் உள்ளிட்டவை அதிகளவு கடத்தப்பட்டு வருவதால் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் கடற்படையினர் மற்றும் கடலோரப் பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது சரக்கு வாகனங்களில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை பண்டல்களை ஏற்றி கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்து 37 மூட்டைகளில் இருந்து 1600 கிலோ பீடி இலை பண்டல்கள், வாகனம் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்புல்லாணி பொலிஸாரின் விசாரணைக்குப் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம், பைபர் படகு மற்றும் பீடி இலை பண்டல்கள் கீழக்கரை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

