வவுனியாவில் PickMe ஆட்டோ விவகாரம்; விடுதியில் பரபரப்பு

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் PickMe செயலி மூலம் முச்சக்கரவண்டி ஒன்றை முன்பதிவு செய்ததைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பயணத் தேவைக்காக PickMe செயலியின் ஊடாக அழைக்கப்பட்ட முச்சக்கரவண்டி விடுதிக்கு வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வழமையாக சேவையில் ஈடுபடும் சாரதிகள் அங்கு சென்று கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமது தரிப்பிடப் பகுதியில் வெளிவாரி முச்சக்கரவண்டிகள் மற்றும் செயலி மூலமான போக்குவரத்து சேவைகளை அனுமதிக்க முடியாது என தெரிவித்த சாரதிகள், விடுதி நிர்வாகத்தினருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், அச்சுறுத்தலும் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

“நாம் நீண்டகாலமாக இந்த பகுதியில் சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயலி மூலமான சேவைகளை அனுமதிக்க முடியாது” என சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் மீட்டர் இன்றியும், இரவு பகல் பாராது அதிக கட்டணங்களை தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் அறவிடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், குறைந்த செலவில் மற்றும் இலகுவாக பயணிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு இவ்வாறான எதிர்ப்புகள் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இவ்வாறான சம்பவங்கள் வவுனியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் பாதிக்கக்கூடும் என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, பயணிகளின் தெரிவுரிமையை பாதுகாக்கும் வகையில் உரிய அதிகாரிகள் தலையிட்டு பொருத்தமான தீர்வொன்றை வழங்க வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *