நாட்டின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரை மிகக் கனமழை

இலங்கையின் வடகிழக்கு திசையில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளதுடன், அடுத்த 36 மணி நேரத்திற்குள் தீவிலிருந்து விலகிச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரை மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கனமழை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *