லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலைத் தோட்டப் பகுதியில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பிணியாக இருப்பது தொடர்பில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாணவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த ஆசிரியர், இதுகுறித்து மாணவியின் தாயாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தாயார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்ததுடன், உடனடியாக லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குறித்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், அதே தோட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

