டிக்கோயா இரட்டை கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

ஹட்டன் – டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

சந்ததேகநபர் இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் கடந்த வியாழக்கிழமை (21) 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் முழு நாட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவான காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

 

இதனடிப்படையில் இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில்,நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டார்.

 

குறித்த சந்தேகநபர், கடந்த 21ஆம் திகதி வயோதிப தம்பதியினரை கொலை செய்துவிட்டு தலை மறைவாகியிருந்தார்.

 

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

 

பதுளை – ஹாலிஎல – தெமோதறை பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், கொழும்பில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கெம்பியன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார்.

 

குறித்த பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த போதே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *