மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களையே சாரும் எனவும், குறிப்பாக யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகள் தொடர்பில் திணைக்களங்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார்.

 

நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்.சந்திரசேகர் தலைமையில், ஆளுநரின் பங்கேற்புடன் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று(27) காலை நடைபெற்றது.

 

யாழ். மாவட்டச் செயலாளர் பிரதீபனின் வரவேற்புரையுடன் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது.

 

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், ‘தீவக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இக்கூட்டம் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டது.

 

கடல் கடந்த தீவகப் பிரதேசங்கள் தொடர்பில் விசேடமானதொரு கண்ணோட்டம் அவசியமாகும். இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியான சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களை உரிய திணைக்களங்கள் எவ்வித காலதாமதமுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். மீண்டுமொரு முறை மீளாய்வு செய்யும் நிலைமையை உருவாக்கக் கூடாது’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது வழமையான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமல்ல. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் விடயங்கள் கூடத் திணைக்களங்களால் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. எனவே, திணைக்களங்கள் இதனைக் கருத்தில் கொண்டு, இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். தீவகப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இனியும் இடம்பெயரக் கூடாது எனில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும், என வலியுறுத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களும் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன:

 

கல்வித்துறை:

 

கல்வி தொடர்பில் ஆராயப்பட்டபோது, கடல் கடந்த தீவுகளில் நிலவும் ஆசிரியப் பற்றாக்குறை விவகாரம் பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை, ஆசிரியர்களுக்கான தங்குமிட மற்றும் போக்குவரத்து வசதிக் குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதற்குப் பதிலளித்த மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், புதிய ஆசிரியர் நியமனங்களில் இப்பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

 

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர், தீவகத்தை ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடாமல் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரினார். இதனையடுத்து, ஆசிரியர் வெற்றிடங்களை முழுமையாக நிரப்புவதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், ‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

போக்குவரத்துத் துறை:

 

நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. ‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய இரு பயணிகள் படகுகளும் திருத்தப் பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் நடுப்பகுதியில் மீண்டும் சேவைக்குத் தயாராகும் என வட பிராந்தியக் கடற்படைத் தளபதியால் தெரிவிக்கப்பட்டது. அதுவரையில், போக்குவரத்துக்காக வாடகைப் படகொன்றை அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தரநிர்ணயப் பரிசோதனைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படுவதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

 

நீர் விநியோகம்:

 

நெடுந்தீவில் தற்போதுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாகத் தீவு முழுவதுக்கும் குடிநீரை விநியோகிக்க முடியாதுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டியில் உள்ள கசிவைத் திருத்துவதன் மூலம் விநியோகத்தை ஓரளவுக்கு அதிகரிக்க முடியும் எனக் கூறப்பட்டது. நெடுந்தீவுக்கு மேலுமொரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான திட்டம் தேசிய திட்டமிடல் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்தனர். இதற்குரிய நிதியை இலங்கை அரசாங்கத்தின் ஊடாகப் பெற்றுத்தர முடியும் என அமைச்சர் உறுதியளித்தார். நயினாதீவுக்கான குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகக் குழாய் மூலமான நீர் விநியோகத்தையே முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதுவரையில் தற்போதுள்ள சுழு இயந்திரங்கள் ஊடாக நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்பட்டது.

 

சுகாதாரத் துறை:

 

நெடுந்தீவு பிரதேச மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகளைச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். மேலும், 10 பொதுமக்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நெடுந்தீவுக்கான மருத்துவர்கள் மற்றும் மருந்து வழங்குநர்களை அடிக்கடி இடமாற்றம் செய்யாமல், அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருந்து சேவையாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

 

அத்துடன், தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

 

நெடுந்தீவில் மாதம் ஒருமுறை மருத்துவ நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிக்குமாறு ஆளுநர் இதன்போது அறிவுறுத்தினார்.

 

சில இறங்குதுறைகளில் பொது மலசலகூட வசதிகள் இன்றி நோயாளர்கள் அவதியுறுவது சுட்டிக்காட்டப்பட்டபோது, வடக்கு மாகாணத்தில் 2027ஆம் ஆண்டுக்குள் தேவையான இடங்களில் தனியார் அல்லது பொது மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கு மாண்புமிகு ஜனாதிபதி விசேட நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளமையை அமைச்சர் தெரிவித்தார்.

 

கால்நடை மற்றும் கூட்டுறவுத் துறை:

 

தீவகப் பகுதிகளில் மாடுகள் திருடப்படுதல் மற்றும் சட்டவிரோதமாகக் கடத்தப்படுதல் ஆகியன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வேலணை பிரதேச சபையால் மண்டைதீவில் உள்ள காவலரணில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து இறுக்கமான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தவிசாளர் சுட்டிக்காட்டினார். இதேபோன்று பொன்னாலைச் சந்தியிலும் காவலரண் அவசியமெனப் பிரதேச செயலாளர் வலியுறுத்தினார்.

 

கூட்டுறவுத்துறை சார்ந்து ஆராயப்பட்டபோது, நெடுந்தீவில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விவசாயிகளுக்கான உரங்களை விநியோகிப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். அத்துடன், பனை மற்றும் தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகப் பானங்கள் விற்பனை மற்றும் அது சார்ந்த தனியார் முதலீடுகள் தொடர்பில் எதிர்மறையான சிந்தனையுடன் செயற்படாமல், அதனை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கபூர்வமாகச் செயற்படுமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

 

இவ்விசேட கலந்துரையாடலில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளங்குமரன், றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *