வல்வெட்டித்துறையில் ரூ.1.15 கோடி திருட்டு; பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ரூபா 1 கோடியே 15 இலட்சம் பணம் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் ஆய்வின் மூலம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளில், வீட்டில் அதிகளவு பணம் இருப்பதை கண்ட இருவரும் நெடுங்கேணியில் வசிக்கும் நபருடன் வீடியோ அழைப்பின் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும், அவர் முழுப் பணத்தையும் எடுத்துவருமாறு அறிவுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பணம் நெடுங்கேணிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டதாகவும், பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியபோது இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களிடமிருந்து ரூபா 74 இலட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *