தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ இன்று(13) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது பாடசாலை அதிபர் வில்லியம் சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் பற்றிக் டிறஞ்சன் சிறப்பு விருந்தினராகவும் தீவக வலய கல்விப் பணிப்பாளர் ஞானசுந்தரன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி நூலகத்தை நாடாவெட்டி திறந்து வைத்து நினைவுக் கல்லையும் திரை நீக்கம் செய்தார்.
இதன் பின்னர் மேடை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றன.
இதன்போது ‘நெய்தலின் ஊற்று’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நூலகத்தை கட்டுவதற்கு அன்பளிப்புச் செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
2021ஆம் ஆண்டு நூலகத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டு அண்ணளவாக ஒரு கோடியே 55 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மேடை நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலையில் புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடமும் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


