இன்னும் 15 நாட்களில் நெல்லறுவடை ஆரம்பமாகவுள்ள நிலையில், உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நெல்லுக்கான நிர்ணய விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரசாங்கம் நெல்லுக்கு உரிய விலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்பு பேரணி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து மாவட்ட செயலகம் வரை இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
இந்த விடயத்தை இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் முத்து சிவமோகன் மற்றும் மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகார சபைத் தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள காணொளி ஊடாக தெரிவித்துள்ளனர்.
நெல்லின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நியாயமான கொள்வனவு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

