சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் 12ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வு நேற்று (20) காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள், யோகாசன ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனப் பயிற்சிகள் மற்றும் கலைநிகழ்வுகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந் நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி உரையாற்றுகையில் யோகா உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான முதுமை வாழ்வுக்கும் பெரும் பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இம்முறை சர்வதேச யோகா தினம் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்திய துணைத் தூதரகத்தின் சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய பீட வைத்தியர்கள், யோகாசன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

