யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற வீதி விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி பாரதி வீதியைச் சேர்ந்த சானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணை பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் சாரதிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், பயிற்சி நிறைவடைந்த பின்னர் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி வீதியின் மறுபக்கத்திற்குச் செல்ல முற்பட்டுள்ளார்.
அந்தவேளை, வீதியில் அதிவேகமாக வந்த மற்றொரு வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சானுஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

