யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான விடயமாக இருப்பதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டின் கடந்தகால வன்முறைகள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில்களை எதிர்நோக்கி வாழும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தக் கண்டுபிடிப்பு மீண்டும் நினைவூட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையெனக் குறிப்பிட்டுள்ள அவர், செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும் உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அரச நிறுவனங்கள், நீதித்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனித எச்சங்கள் யாருடையவை, அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள், அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது போன்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், உண்மையை மறைப்பதோ அல்லது விசாரணைகளை தாமதப்படுத்துவதோ நீதியை வழங்காது என்றும் தெரிவித்துள்ளார்.
போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதே நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகள் இன்றியும் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காலம் தாழ்த்தாது நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும்” என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

