சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79 வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79 வது சிரார்த்த தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் (19) மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.

 

கல்லடி – உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

 

இந் நிகழ்வில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் உதவிப் பொது முகாமையாளர் பிரம்மஜானந்தா ஜீ மகஹராஜ், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா, மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் முத்துகுமார் செல்வராசா மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ”வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” பாடல் இசைக்கப்பட்டு சிரார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.

 

அத்தோடு சிவானந்தா தேசிய பாடசாலையின் மாணவர்களின் பங்கேற்புடன் சுவாமியின் திருவுருவ படம் தாங்கியவாறு மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி வழியாக ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்று பூங்காவில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் கலந்து கொண்டு அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டு வின்சன்ட் உயர்தர மகளீர் தேசிய பாடசாலை மாணவிகளினால் ”வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” பாடல் பாடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, இந்துக் கல்லூரி, மகாஜன கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி மற்றும் ஆணைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி ஆகியவற்றின் மாணவ மாணவிகளும் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *