கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் பழமரக் கன்றுகளை பராமரித்தல் தொடர்பான செயன்முறை பயிற்சி

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக வளாகத்தில் உள்ள பழமரக் கன்றுகளை முறையாக கத்தரித்து பராமரிப்பது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செயன்முறைப் பயிற்சி அண்மையில் (09) பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் விவசாயப் போதனாசிரியர் ஏ.ஐ. கலைமோகன், தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் இணைந்து பழமரக் கன்றுகளை சரியான முறையில் கத்தரிக்கும் நடைமுறைகளை விளக்கி, நேரடி செயன்முறைப் பயிற்சியையும் வழங்கினார்.

 

இதன்போது, பழமரக் கன்றுகளின் ஆரோக்கியமான வளர்ச்சி, அதிக மற்றும் தரமான விளைச்சலை உறுதிப்படுத்தும் வகையில் மரங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

 

மேலும், தென்னை மற்றும் ஏனைய பழமரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துதல், நோய் மற்றும் பூச்சித் தாக்கங்களைக் கட்டுப்படுத்துதல், எதிர்காலத்தில் அதிக உற்பத்தியைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றில் இத்தகைய பராமரிப்பு நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றும் என விவசாயப் போதனாசிரியர் ஏ.ஐ. கலைமோகன் தெரிவித்தார்.

 

நிகழ்வில் கருத்துரையாற்றிய பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக், குறுகிய கால அழைப்பை ஏற்று வருகை தந்து பயனுள்ள தொழில்நுட்ப அறிவுரைகளையும் செயன்முறைப் பயிற்சியையும் வழங்கிய விவசாயப் போதனாசிரியருக்கு நன்றியைத் தெரிவித்தார். மேலும், இத்தகைய பயிற்சிகளின் மூலம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேவையான அறிவைப் பெற்று, எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை திறம்பட முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

 

இதனுடன் இணைந்து, பிரதேச செயலக வளாகத்தில் தியாவட்டவான் 210சி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளின் பங்களிப்புடன் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *