சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் வங்ககடலோரம் வீற்றிருந்து நாடிவரும் அடியவர்களின் குறைநிறைகளை தீர்த்து வேண்டும் செல்வத்தை வாரிவழங்கும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று(26) இடம்பெற்றதுடன் தொடர்ந்து 15 நாட்கள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு தமிழ்ப்பிரதேச மக்களது திருவிழாவோடும் இடம்பெற்று ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம் கொடியிறக்கம்; பூங்காவனம் மற்றும் வைரவர் பூஜையுடன் நிறைவுறவுள்ளது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையினைத் தொடர்ந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சகிதம் கொடிச்சீலை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூஜை இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன் பின்னர் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார்.
கொடிக்தம்பம் அருகே இடம்பெற்ற பூஜைகளின்; பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
ஆலயத்தலைவர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற ஆடி அமாவாசை உற்சவம் மற்றும் தீர்த்தோற்சவ கிரியைகள் யாவும் சிவாகம வித்தியா பூசணம் சிவாச்சாரிய திலகம் ஜோதிட வித்தியா தத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்கருக்கள் ஆகியோரால் நடாத்தி வைக்கப்பட்டது.


