மட்டக்களப்பில் 6ஆவது முறையாக இலவச கண் பரிசோதனை முகாம்!

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா மற்றும் விவேகனந்தா மகளிர் கல்லூரிகளின் பழைய மாணவர் அமைப்பான S.V.S.A யினால் ஒழுங்கு செய்யப்பட்ட  கண்பரிசோதனை முகாம்  2026.09.18 திகதி கல்லடி உப்போடை சிவாநந்தா தேசிய பாடசாலையில் 6 வது தடவையாக நடாத்தப்பட்டது.

பிரபல கண் சத்திர சிகிச்சை நிபுணரும் பழைய மாணவருமாகிய வைத்தியர் பூ.ஸ்ரீஹரநாதன் தலைமையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமிற்கு மட்டக்களப்பு விசன் கெயர் நிறுவனத்தினரும் இணை அனுசரனை வழங்கியிருந்தனர்.

S.V.S.A அமைப்பானது, 1988 O/L மற்றும் 1991 A/L மாணவர்களால் கல்லடி பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

அந்த வகையில் இவ்வமைப்பின் செயற்றிட்டங்களில் ஒன்றாக இலவச கண் பரிசோதனை முகாம் 2018 ஆண்டு முதல் ஒவ்வெரு வருடமும் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டு வருகின்றது.

இவ் வருடம் கல்லடி முதல் மஞ்சந்தொடுவாய் வரையுள்ள பாடசாலைகளில் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான  கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் குறித்த அமைப்பால் நடாத்தப்படுகின்ற கண் பரிசோதனையின் போது சுமார் 10% – 15% வரையான கண் பார்வை குறைபாடுள்ள மாணவர்கள்  அடையாளங்காணப்படுவதுடன் அவர்களுக்கான ஆரம்ப மற்றும் தொடர் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் வழி காட்டுதல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது.

மேலும் தற்காலத்தில் கைத்தொலைபேசி பாவனை, கணினி பாவனை என்பன வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் குறுந்தூர கண் பார்வை குறைபாடும் சமூகத்தில் அதிகரித்துள்ளது. இந் நிலையில் கண்ணில் காணப்படும் குறைபாடுகளை  அடையாளம் கண்டு அதனை குணப்படுத்தக் கூடிய வயதான 7-8 வயது காணப்படுவதுடன் அவ் வயது பிரிவினருக்காகவே குறித்த கண்பரிசோதனை நடாத்தப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வில் 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டதுடன் SVSA அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர் எஸ்.தயாபரன் என பலரும் கலந்து கொண்டு சிறப்பான முறையில் இலவச கண் பரிசோதனையினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *