முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முழுமையான தபால் நிலையம் இன்று (19) மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சுமார் 28 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நவீன தபால் நிலையத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 12,231 குடும்பங்களுக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தபால் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரம்-I தபால் நிலையமாக இயங்கவுள்ள இதன் மூலம் நேரடியாக 5,830 குடும்பங்களும், அதன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆறு உப தபால் நிலையங்கள் ஊடாக மேலும் 4,883 குடும்பங்களும் சேவைகளைப் பெறவுள்ளனர்.
அத்துடன், 68 அரச நிறுவனங்கள், 9 ஹோட்டல்கள் மற்றும் 4 தொழிற்சாலைகளும் இந்த தபால் நிலையத்தின் சேவைகளால் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, கட்டடத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் புதிய தபால் நிலையக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் கீழ் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள 12ஆவது புதிய தபால் நிலையமாக முல்லைத்தீவு தபால் நிலையம் அமைந்துள்ளது. ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் புதிய தபால் நிலையக் கட்டடங்களுக்காக வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தபால் சேவையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ் 2026ஆம் ஆண்டில் புதிய கட்டடங்களுக்காக 400 மில்லியன் ரூபாயும், புனரமைப்புப் பணிகளுக்காக 600 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தபால் திணைக்களத்தின் வாகனங்கள், கண்காணிப்பு கமராக்கள், கணினிகள் மற்றும் டெப்லெட் சாதனங்களுக்காகவும் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் சேவைகளை மேலும் திறன் மிக்கதாகவும் நவீனமாகவும் மாற்றுவதுடன், பொதுமக்களுக்கு சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் வழங்குவதற்கும் இந்த புதிய கட்டடம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

