யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள அரியாலை – சித்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்று(15) முதல் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.
சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புகள் அவதானிக்கப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
இதன்போது, மனித என்புகள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே, இன்று அங்கு அகழ்வாய்வு இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.
துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ தலைமையில் இந்த ஆய்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

