இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட இராமேசுவரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் உடனடியாக மீட்க மத்திய அரசு தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கச்சிமடத்திலிருந்து கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடல் எல்லை விவகாரத்தை காரணமாகக் கொண்டு தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

