“பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்” நூல் வெளியீடு

அக்கரைப்பற்று பனங்காடு கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்” எனும் வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று (04.10.2026) ஞாயிற்றுக்கிழமை வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெற்றது.

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலத்தின் வரலாற்றுப் பின்னணி, பண்பாடு மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் வெளியிடப்பட்டது.

நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் துணைவியார் திருமதி நவநாயகமூர்த்தி வழங்க, வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய நிர்வாக சபையின் சார்பில் தலைவர் ந. லோகராஜ், செயலாளர் அ. பிரதீபன் மற்றும் பொருளாளர் இ. தயாபரன் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் வரவேற்புரையை கே. சத்தியராஜ் நிகழ்த்தியதுடன், நூலின் அறிமுகவுரையை சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் பூ. பரமதயாளன் நிகழ்த்தினார். நூலின் அணிந்துரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் அனுசியா சேனாதிராசா நிகழ்த்தினார்.

நூலின் நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கௌரி லஷ்மிகாந்தன் நிகழ்த்தியதுடன், நூலின் ஏற்புரையை ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி ஜெகதீஸ்வரி நாதன் வழங்கினார். நூல் சிறப்புரையை வரலாற்று ஆசிரியர் பு. புவனகாந்தன் நிகழ்த்தினார்.

நூலாசிரியர் நா. நவநாயகமூர்த்தி சுகயீனம் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலையில், அவரது சார்பில் அவரது துணைவியார் திருமதி நவநாயகமூர்த்தி கலந்துகொண்டார். இதன்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன், லாகுகல பிரதேச செயலாளர் திரு என் .நவநீதன், போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திரு. சி. கமலராஜ், சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் பூ. பரமதயாளன், பெருநிறுவனப் பிரிவு உதவி ஆணையாளர் லோ. பவித்திரன், கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் திரு எம். கோபாலரெத்தினம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியலாளர்கள், ஆலயத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

வீரமுனையின் தொன்மையான வரலாற்றையும், சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலத்தின் வரலாற்றுப் பின்னணியையும் ஆவணப்படுத்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தேசிய பரீட்சைகளில் சித்தி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது பரீட்சைகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *