போதிய மழை பெய்து விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற வேண்டியும், சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக நிறைவடைந்தமைக்கு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் மும்மத சமய வழிபாடும் விசேட பிரார்த்தனையும் நேற்று (07) சேனாநாயக்க சமுத்திர அணைக்கட்டு பகுதியில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூவின மதத் தலைவர்கள், மாவட்ட விவசாய அமைப்புகளின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வை அம்பாறை , அக்கரைப்பற்று, மற்றும் தமன வதிவிடத் திட்ட முகாமையாளர் காரியாலயங்கள் இணைந்து இவ்வருடாந்த சமய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கிடைக்கவும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து விவசாய செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படவும், சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக நிறைவடைந்தமைக்கு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இவ்வருடாந்த சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மூவின மதத் தலைவர்களின் தலைமையில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், போதிய மழை பெய்யவும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கவும் விசேட பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரம்பரிய முறைப்படி புத்தரிசியில் பொங்கல் பொங்கப்பட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இயற்கை வளம் பெருகவும், மக்கள் சுபிட்சமாக வாழவும் பிரார்த்திக்கப்பட்டது.
மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் மூவின மக்களும் ஒன்றிணைந்து மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.


