தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்று மட்டக்களப்பு வீரர் துஷ்யந்தன் சாதனை!

தேசிய மட்ட கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மட்டக்களப்பைச் சேர்ந்த வீரர் துஷ்யந்தன்.

50ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட கராத்தே போட்டியில், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற துஷ்யந்தன், 60 கிலோ எடைப்பிரிவு குமித்தே (Kumite) போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

கொழும்பு களனி பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் ஒக்டோபர் 2, 3 மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த முன்னணி கராத்தே வீரர்கள் பங்கேற்றனர்.

கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துஷ்யந்தன், தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்து இறுதியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

போட்டியில் துஷ்யந்தனின் வெற்றிப் பயணம்:

ஊவா மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம் – 0:8

மேல் மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம் – 0:8

சபரகமுவ மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம் – 0:8

மேல் மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம் – 2:4

இந்த வெற்றியின் மூலம் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் SCKA கராத்தே கழகம் ஆகியவற்றுக்குத் துஷ்யந்தன் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது இந்தச் சாதனைக்குப் பின்னால் மட்டக்களப்பு SCKA கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் Hr. சில்வா சென்சே மற்றும் பயிற்றுவிப்பாளர் ரவிமணாளன் கௌசிகன் சென்சே ஆகியோரின் பயிற்சியும் வழிகாட்டுதலும் முக்கிய பங்காற்றியுள்ளன.

அதேவேளை, துஷ்யந்தனின் விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான பயிற்சியும் இந்த வெற்றிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன.

மேலும், போட்டியில் பங்கேற்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை மண்முனைப்பற்று விளையாட்டு உத்தியோகத்தர் சிவகுமார் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மண்ணிலிருந்து தேசிய விளையாட்டுத் துறையில் தடம் பதித்துள்ள துஷ்யந்தனின் இந்த வெற்றி, இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க அவர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கின் பெருமையாகவும், மட்டக்களப்பின் மைந்தனாகவும் தேசிய அரங்கில் தங்கப் பதக்கம் வென்ற துஷ்யந்தனுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *