சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியை ஒழிக்க விசேட அதிரடிப்படைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்!

 

மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியை முற்றாக ஒழிப்பதற்கு விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு, பாலமீன்மடுவில் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

மீனவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கடந்த முதலாம் திகதி கடற்படையினரின் உதவியுடன் ஐந்து சட்டவிரோத சுருக்கு வலைகள் கைப்பற்றப்பட்டதாகவும், கடந்த 20ஆம் திகதி காத்தான்குடி முதல் மாங்காடு வரையான கடற்பரப்பில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான மேலும் நான்கு சுருக்கு வலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

கைப்பற்றப்பட்ட வலைகள் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், குறித்த வலைகள் வாழைச்சேனை மற்றும் வாகரை கடற்பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவல்கள் தவறானவை எனக் கூறிய அவர், அதனை வன்மையாகக் கண்டித்தார்.

 

சட்டவிரோத சுருக்கு வலைப் பயன்பாட்டைத் தடை செய்யக் கோரி ஒன்பது மீனவர் சங்கங்கள் இணைந்து கடற்றொழில் திணைக்களத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தி மகஜர் கையளித்தும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

 

மேலும், சில கடற்றொழில் பரிசோதகர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு ஆதரவளிப்பதாகவும், இதனால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியைத் தடுக்க கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களமும் கடற்படையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், ஒரு வாரத்திற்குள் இச்செயற்பாட்டை ஒழிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *