நாட்டின் எந்தப் பகுதியிலும் இதுவரை வெள்ள அபாயம் ஏற்படவில்லை!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ள போதிலும், இதுவரை எந்தவொரு இடத்திலும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார இது குறித்துத் கருத்துத் தெரிவிக்கையில், களு கங்கை மற்றும் களனி கங்கையில் சில பகுதிகளில் 50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ளதால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அது பெருவெள்ளம் ஏற்படும் அளவுக்கு இன்னும் அதிகரிக்கவில்லை என்றும், நில்வளா, கின்கங்கை, அத்தனுகலு ஓயா மற்றும் மா ஓயா உள்ளிட்ட ஏனைய நதிப் படுகைகளிலும் நீர்மட்டம் சாதாரண அளவிலேயே உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அநுராதபுரம், திருகோணமலை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருவதன் காரணமாகத் தெதரு ஓயா மற்றும் ராஜங்கனை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தெதரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 5,300 கன அடி நீரும், ராஜங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 2,300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் திடீரெனப் பெய்யும் பலத்த மழையினால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் வாய்ப்புள்ளது.

எனவே, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *