வறுமையை ஒழித்து, வளமான கிராமங்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “பிரஜாசக்தி” தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு, கடந்த 28.10.2026 அன்று கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
“வறுமையை வெல்வோம்; வளமான கிராமங்களை உருவாக்குவோம்; மக்களின் சக்தியால் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராமிய மக்களை வலுவூட்டும் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பில் வடமாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உப்பாலி பன்னிலகே, 2026ஆம் ஆண்டில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 324 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 363 கிராமங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 325 கிராமங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
மேலும், கிராமியத் தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை விருத்தி செய்தல், மக்களின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கிராமங்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தியை முன்னெடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழான அபிவிருத்திப் பணிகளை மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் ஊடாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள், சமூக சக்தித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மக்களின் பங்கேற்புடன் கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் வறுமையை ஒழிப்பதே பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

