பணச்சலவை குற்றச்சாட்டு – பெண் ஒருவர் கைது!

ஏழு கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருள் பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் குற்றவாளி ஒருவரின் சகோதரி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட 5 சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியிருந்தது.

அந்த சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரி பிலியந்தலை பகுதியில் உள்ள இரு தனியார் வங்கிகளில் நடத்திச் சென்ற 4 கணக்குகள் தொடர்பில் விசாரணை அதிகாரிகளுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இக்கணக்குகளுக்கு 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இதன்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களால் இக்கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளமை மேலதிக விசாரணையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த கணக்குகளை நடத்திச் சென்ற குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மடபாத பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என்பதுடன், அவர் இன்று (6) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *