எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார ஊழியர்களின் எட்டு முக்கிய கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு வலியுறுத்தி, நவம்பர் 10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை குறித்த சங்கத்தினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
ஐந்து நாள் வேலை வாரத்திற்கான மேலதிக எட்டு மணித்தியால பணிக்கொடுப்பனவு, சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல், மேலதிக நேரக் கொடுப்பனவு வீதத்தை உறுதிப்படுத்துதல், நியாயமான ஆளணிச் சேர்ப்பு நடைமுறையை உருவாக்குதல் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், இலவச சுகாதார சேவைக்காக வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 5 வீத நிதி ஒதுக்கீடு, பதில் கடமை நியமனங்களை நிரந்தரப்படுத்துதல், உணவு, சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் விடுதி வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களிலும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள சங்கத்தினர், அரசாங்கம் முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி அரசாங்கம் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நவம்பர் 10ஆம் திகதி போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இம்முறையும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

