கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவுக்குள்ளான இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகின் மூன்று மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் துரித நடவடிக்கையின் மூலம் இன்று திங்கட்கிழமை (9) காலை கரைக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 06ஆம் திகதி ஏழு மீனவர்களுடன் திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ‘செஷான் புதா 02’ (IMUL-A-1715 MTR) என்ற பலநாள் மீன்பிடிப் படகு, திருகோணமலையிலிருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. இதன்போது படகிலிருந்த மூன்று மீனவர்கள் திடீரென உடல்நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில் அவர்களை கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களம், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் அறிவித்தது.
இதற்கமைய, இலங்கை கடற்படையின் கிழக்குக் கடற்படை கட்டளையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள P 450 என்ற அதிவேகத் தாக்குதல் படகு உடனடியாக மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்போது, நோய்வாய்ப்பட்ட மூன்று மீனவர்களும் குறித்த படகில் ஏற்றப்பட்டு, அவர்களுக்கு அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன், துரிதமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

