வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய இராணுவத் திட்டம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான 23ஆவது அமர்வு பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடைபெற்றது.

சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வளைகுடா நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றன.

அமெரிக்கா – ஈரான் இடையிலான அதிகரித்து வரும் பதற்றம், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு சவால்கள் இம்மாநாட்டின் முக்கிய பேசுபொருளாக அமைந்தன.

இதன்போது, வளைகுடா நாடுகளின் ஒருங்கிணைந்த இராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் குவைத்தில் புதிய முன்னோக்கிச் செயல்படும் கட்டளை மையமொன்றை நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான இராணுவப் படைகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பு நாடுகளின் இராணுவப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்தல், உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளுதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தப் பாதுகாப்பு முயற்சிகளில் சவூதி அரேபியா முக்கிய பங்காற்றி வருகின்றது. எதிர்காலத்திலும் வளைகுடா நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *