வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா (13.11.2026) முரசுமோட்டை கிளி/முருகானந்தா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட நாடகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கதிரேசு ரதிதரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இதன்போது, பல்வேறு கலை மன்றங்கள் மற்றும் பாடசாலைகளின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்டத்தின் கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டுத் துறைகளுக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி 2026ஆம் ஆண்டுக்கான கலைக்கிளி விருது மற்றும் இளங்கலைஞர் விருதுகள் வழங்கி கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டத்தின் பாரம்பரியக் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

