பாதாள உலகக் குழுத் தலைவனின் சகா கைது!

வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழுவின் தலைவன் ஒருவரின் நெருங்கிய சகா, 101 கிராம் 300 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் அம்பலாங்கொடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை, கண்டேகோட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபர் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்து படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவராகத் தேடப்பட்டு வரும், வெளிநாட்டில் வசிக்கும் ‘ஜெயசேகர சுட்டி’ எனப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவனின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் சந்தேகநபர் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டேகோட ரயில் நிலையத்திற்குப் பின்னால் உள்ள குருந்துவத்த வீதியில் போதைப்பொருள் விற்பனைக்காக சந்தேகநபர் காத்திருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் துரத்திச் சென்று கைது செய்துள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயினின் பெறுமதி சுமார் 4 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலபிட்டிய நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சந்தேகநபர் மீண்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று (15) பலபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவரைத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *