வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிற வர்ணம் பூசி, போலி லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களாக மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக வர்ணம் பூசப்பட்ட சிலிண்டர்களைப் பழைய சிலிண்டர்களைப் போன்று காண்பிப்பதற்காக, அவற்றின் மீது அப்பம் தயாரிக்கும் மாவு, மிளகாய்க் குழம்பு உள்ளிட்ட உணவுக் கழிவுகளைப் பூசி நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

