மயிலிட்டி காணிகளை விடுவிக்கக் கோரும் பேராசிரியர் சூசை ஆனந்தன்!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் பேராசிரியர் சூசை ஆனந்தன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி மீனவர்கள் தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள், இராணுவத் தேவைகளுக்குப் பதிலாக வெங்காயம், மிளகாய் போன்ற விவசாயப் பயிர்ச்செய்கைகளுக்கும் வியாபார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மீனவர் தினம் மட்டக்களப்பு தன்னாமுனையில் வடக்கு கிழக்கு இளைய மீனவர் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாண்டின் சர்வதேச மீனவர் தினம், “மாற்றத்திற்காக மக்களை வலுப்படுத்தல்: மீன்பிடி மற்றும் உயிரின வளர்ப்புத்துறையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான கண்ணியமான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பேராசிரியர் சூசை ஆனந்தன், இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை பங்களிப்புச் செய்துவந்த போதிலும், தற்போது அந்த உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இயற்கையான கடல் மற்றும் நன்னீர் மீன் வளங்களைக் கொண்டிருந்தும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 1983ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் 82,000 மெட்ரிக் தொன் மீன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது 20,000 மெட்ரிக் தொன்னைக் கூட எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்தகால யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மீனவச் சமூகங்கள் பாரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளதுடன், இடம்பெயர்ந்த பல மீனவக் குடும்பங்கள் இன்றுவரை தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை தொடர்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *