கடற்றொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 20 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நேற்று (21) காலி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு கடற்றொழில் அமைச்சுக்கு 15,400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய அமைச்சுகள், மாவட்டங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடுகளையும் சேர்த்து 20 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் சந்தைகளை நவீனமயப்படுத்துவதுடன், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு மீனவ மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

