தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவாங்கெட்கியோ தலைமையிலான தூதுக்குழுவினர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று (23) அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, இருதரப்பு பொருளாதார உறவுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கை சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 30 நாட்கள் விசா இன்றி தாய்லாந்துக்குப் பயணிக்க அனுமதிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சுற்றுலா, கடல்சார் ஒத்துழைப்பு, விவசாயம், உணவுப் பதப்படுத்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
2027 ஜனவரியில் நடைபெறவுள்ள Expo Sri Lanka கண்காட்சியில் பங்கேற்று இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு தாய்லாந்து வழங்கிய உதவிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

