பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 65,000 அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (27) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான செலவுகள் பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியிலிருந்து ஏற்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக வட்டியில்லா கடன்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் முதல் பொலிஸ் பரிசோதகர்கள் வரை இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் விரும்பும் மின்சார மோட்டார் சைக்கிள்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
மிகக் குறுகிய காலத்தில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

